Thursday, May 3, 2012

கறுப்புதான் களையான அழகு, ஆரோக்கியமும் கூட!

சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து இன்றைய இளம் தலைமுறையினர்ஆழ்மனதில் பதிந்து போய் விடுகிறது. கொஞ்சம் கறுப்பாக இருந்தாலும் முகத்தை சிவப்பாக்க சந்தைகளில் விற்கும் எண்ணற்ற அழகுசாதன கிரீம்களை வாங்கி முகத்தில் பூசி வெள்ளையடித்துக் கொள்கின்றனர். அதெல்லாம் பணத்திற்கு வேட்டு வைக்கும் சமாச்சாரம். கறுப்பானவர்கள் இனி கவலைப்பட வேண்டாம் என்பது அழகுக்கலை நிபுணர்கள் களின் நம்பிக்கை வார்த்தையாகும்.

கறுப்பாக பிறந்து விட்டோமே என்ற தாழ்வு மனப்பான்மை இருந்தால் அதனை இன்றே மறந்துவிடுங்கள் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள் ஏனெனில் கறுப்பே சிறந்த அழகு! என்கின்றனர் அவர்கள். இனி கறுப்பான சருமம் என்று கவலைப்படாமல், ஆரோக்கியமான சருமம் என்று சந்தோஷப்படுங்கள். அதுதான் உண்மை.

புற்றுநோய் தாக்காது

கறுப்பானவர்களின் தேகத்தில் நிறத்தை அளிக்கும் மெலனின் மிகப்பெரிய நன்மை அளிக்கிறது. இவர்களுக்கு வெயிலில் உள்ள அல்ட்ரா வயலட் கதிர்கள் எளிதில் தாக்காது. மேலும் தோல் புற்றுநோய் தாக்குவதும் குறைவு என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பொதுவாக கறுப்பு நிறம் கொண்டவர்களுக்கு அதிகமாக முகப்பரு வருவதில்லை. சிவப்பாக இருப்பவர்கள் பலரும், முகம் முழுவதும் முகப்பரு வந்து அவதிப்படுவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்.சிவந்தவர்களின் முகத்தில் சிறு மருவோ, கட்டியோ எது வந்தாலும் அப்பட்டமாக வெளியே தெரியும். ஆனால் கறுப்பானவர்களுக்கு அந்த பிரச்சினை இருப்பதில்லை.

கறுப்பானாலும் களை

சிவந்த நிறம் மட்டுமே அழகாகிவிடமுடியாது முகமும் களையாக இருப்பது அவசியம். அப்படி முகமும்,உடல் அமைப்பும் களையாக-வசீகரமாக இருந்தால் தான் ஒரிஜினல் அழகு. கறுப்பாக இருந்தாலும்'களை'யாக இருப்பவர்கள் பலர் உண்டு அந்தவகையில், அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பாலிவுட் நடிகைகள் பிபாஷா பாசு, நந்திதா தாஸ், போன்ற நடிகைகள் கறுப்பாக இருந்தாலும் களையான முக அமைப்பால் அழகியாக உயர்ந்தவர்கள். அதேபோல் ஆண்களிலும் கறுப்பு சூப்பர் ஸ்டார்கள்தான் அதிகம் உள்ளனர்.

வெளிர் நிற ஆடைகள்

கறுப்பாக இருப்பவர்கள், அவர்களது நிறத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய, உடல்வாகுக்கு பொருந்தும் ஆடைகளையும், அலங்காரத்தையும் செய்து கொண்டால் அவர்களை விட அழகானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

வெளிர் நிறத்திலான ஆடைகள், எளிய அலங்காரம் போன்றவை கறுப்பானவர்களை மேலும் அழகாகக் காட்டும். வெள்ளைக்கல் பதித்த நகைகள், தங்க நகைகள் போன்றவை சிவப்பானவர்களை விட,கறுப்பானவர்களுக்குத்தான் எடுப்பாகத் தோன்றும்.

சந்தனமும், தயிரும்

முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமானால் பல சிகிச்சைகள் உள்ளன. திடீரென சிவப்பாக்க எந்த முறையும் இல்லை. எனவே, உடனடியாக சிவப்பாக்க வேண்டும் என்று எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்ப்பந்திக்க வேண்டாம். வீட்டிலேயே அதற்கான வழிமுறைகள் உள்ளன.

வாரத்தில் ஒரு நாளாவது சருமத்திற்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை சாறு போன்ற எதையாவது ஒன்றை தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறையில் - அதேசமயம் எளிய முறையில் உங்கள் அழகைப் பேணலாம். அத்துடன், புன்சிரிப்பும், அழகை அதிகரித்துக் காட்டும் ஆபரணமாகும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

லைட் மேக் அப்

கறுப்பான தேகம் கொண்டவர்கள் மேக் அப் செய்யும் போது கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் பவுன்டேசன் தேர்ந்தெடுப்பது முக்கியமானது. ஸ்கின் டோனிற்கு ஏற்ப பவுண்டேசன் போட்டுவிட்டு அதற்குப் பின் லைட்டாக பவுடர் போடலாம். மேலும் மஸ்காரா, ஐ லைனர் ஆகியவற்றை சற்று திக்காக உபயோகிக்கலாம். மேலும் உதட்டிற்கு லிப் கிளாஸ் போடுவது கறுப்பு சருமத்திற்கு ஏற்றது. அப்புறம் பாருங்கள் ஜொலி ஜொலிக்கும் அழகு முகம் உங்களுடையதாகும்!