இந்திய ரூபாய் குறியீடு வடிவமைப்பு: தமிழகத்துக்கு பெருமை சேர்த்த உதயகுமார்
புது தில்லி, ஜூலை 16: இந்திய ரூபாய் குறியீடு வடிவமைத்ததன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் டி. உதயகுமார்.
சர்வதேச அளவில் இந்திய நாணயத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் குறியீடு அமைய வேண்டும் என்றும் உரிய டிசைனை அனுப்பலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வடிவமைப்பை அனுப்பியிருந்தனர். இதில் 5 வடிவங்களை ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோரட் தலைமையிலான குழு தேர்வு செய்தது. இதில் உதயகுமார் அனுப்பிய வடிவமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் இப்போது குவாஹாட்டியில் உள்ள ஐஐடி-யில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். வடிவமைப்பு சார்ந்த படிப்பு முதல் முறையாக இந்த ஐஐடி-யில்தான் தொடங்கப்பட்டது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலில் வடிவமைப்பு பிரிவில் பட்டம் பெற்ற மும்பை ஐஐடி-யின் முன்னாள் மாணவராவார்.
ஓராண்டுக்கு முன்பு இந்த வடிவமைப்பை உருவாக்கி அளித்ததாகவும், இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி ததும்பக் குறிப்பிடுகிறார் உதயகுமார். இந்த வடிவமைப்பின் மூலம் இவருக்கு பெரும் புகழும் ரூ. 2.5 லட்சம் ரொக்கப் பரிசும் கிடைத்துள்ளது.
இவர் தமிழ் எழுத்து வடிவ வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி (பிஹெச்டி) கட்டுரையையும் தாக்கல் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையும் இவருக்குப் புகழைத் தேடித் தரும் என உறுதியாக நம்புகிறார் இவரது தந்தை தர்மலிங்கம். இவர் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினராவார்.
சர்வதேச அளவில் இனி இந்திய ரூபாய் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வரக்கூடிய இந்த வடிவமைப்பை ஒரு தமிழர் உருவாக்கியிருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்ப்பதாகும்.
குறியீடு வடிவமைப்பில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட மற்ற நான்கு பேருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் ஆறுதல் பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறியீடு பெற்றதன் மூலம் அமெரிக்காவின் டாலர், பிரிட்டனின் பவுண்ட், ஜப்பானின் யென் மற்றும் ஐரோப்பாவின் யூரோ கரன்சிகளுக்கு அடுத்தபடியாக இந்திய ரூபாயும் இடம்பெறும்.
SOURCES: EMAIL
No comments:
Post a Comment
Invited comments from all visitors